உயிரிழந்த ராதா, பூங்கொடி, கோகுல், தனலட்சுமி
திருவள்ளூர்: சென்னை கொடுங்கையூர், தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன்(42) ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது மனைவி பூங்கொடி(39) மகள் தனலட்சுமி(10) மாமியார் ராதா(65), மைத்துனரின் மகன்களான கோகுல்(10), பிரசாந்த்(15) ஆகியோருடன் ஆட்டோவில், பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.
சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் பனப்பாக்கம் கிராமத்தில், எம்டிசி நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ வந்தபோது முன்னால் சென்ற அடையாளம் தெரியாத லாரியின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பூங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெரியபாளையம் போலீஸார் விரைந்து வந்து, படுகாயமடைந்த மற்றவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ராதா மற்றும் கோகுல் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். தனலட்சுமி நேற்று மாலை உயிரிழந்தார்.
மற்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த 4 பேரின் உடலையும் போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தைத் தேடி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.