தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய இளைஞர் மற்றும் சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் என்ற நண்டு (22). இவருடைய நண்பர் 17 வயது சிறுவன். இவர்கள் இருவர் மீதும் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இவர்கள் இருவரும் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அம்பேத்கர்நகரில் இருவரும் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தாளமுத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் (38), தலைமைக் காவலர்கள் மீனாட்சி சுந்தரம், சையது ஈசாக் ஆகியோர் அம்பேத்கர் நகருக்கு நேற்று காலை சென்று தேடினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த இருவரும் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது, அரிவாள் மற்றும் வாளால் போலீஸாரை தாக்கினர்.
இதில், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜுக்கு உடலில் 2 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தலைமைக் காவலர்கள் மீனாட்சி சுந்தரம், சையது ஈசாக்கை கீழே தள்ளிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர். அப்போது, சாலையோர பாலத்தில் இருந்து குதித்தபோது கார்த்திக்கின் வலது கால் எலும்பு உடைந்தது. சிறுவனின் இடது கை முறிந்துள்ளது.
இதுகுறித்து, உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் கொடுத்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கார்த்திக் என்ற நண்டு மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.