தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் இளைஞர் வீடு புகுந்து வெட்டியதில் படுகாயமடைந்த சிறுமியின் தந்தையும் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (51). இவரது மனைவி மேரி விஜிலா (40). இந்த தம்பதியருக்கு 15, 14 வயதுகளில் 2 மகள்களும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில், 15 வயது மகளுடன் சாத்தான்குளம் ஆனந்தபுரத்தை சேர்ந்த இஸ்ரவேல் மகன் ஞானபிரகாஷ் (23) என்பவர் பழகி வந்துள்ளார். இதை முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், ஞானபிரகாஷுடன் பேசுவதை அந்த சிறுமி நிறுத்திவிட்டார்.
ஆத்திரமடைந்த ஞானபிரகாஷ், கடந்த 22-ம் தேதி நள்ளிரவு முத்துக்கிருஷ்ணனின் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது மனைவி மேரி விஜிலா, 12 வயது மகன் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். மேலும், 2 சிறுமிகளையும் மிரட்டி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, தனது வீட்டில் அடைத்து வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
ஞானபிரகாஷ் வெட்டியதில் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணனும் அவரது மகனும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தட்டார்மடம் போலீஸார், ஞானபிரகாஷின் வீட்டில் அடைத்து வைத்திருந்த இரு சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர். தப்பியோடிய ஞானபிரகாஷை அன்றைய தினமே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்கிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.