க்ரைம்

ஏடிஎம்களில் நிரப்ப வேனில் கொண்டு சென்ற ரூ.24 லட்சம் மாயம்: 4 ஊழியர்களிடம் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையை அடுத்த வேளச்சேரியில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கியில் இருந்து, ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பும் பணியை 'கேஷ் செக் யூர் சிஸ்டம்' என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாகனத்தில் 105 பெட்டிகளில் மொத்தம் ரூ.4 கோடியே 69 லட்சம் பணம் ஏற்றப்பட்டது. அந்த வாகனத்தில் சென்ற ஊழியர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 14 ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பினர். தொடர்ந்து, 15-வது ஏடிஎம் மையமான பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணத்தை நிரப்ப முயன்றபோது, வாகனத்தில் 3 பெட்டிகள் குறை வாக இருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவர்கள் வந்த வழியே சென்று தேடிப் பார்த்தபோது, பெரம்பூர் முரசொலி மாறன் மேம் பாலத்தின் மேலே இரண்டு இரும்புப் பெட்டிகள் காலி யாகக் கிடந்தன. அதிலிருந்த ரூ.24 லட்சம் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஓடும் வாகனத்தில் இருந்து இரும்புப் பெட் டிகள் எப்படி வெளியே விழுந்தன ? அல்லது திட்டமிட்டு யாராவது திருடினார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த வாகனத்தில் பணியில் இருந்த ஊழியர் சதீஷ் (34), தலைமை ஊழியர் அருள் பிரசாத் (21), பாதுகாப்பு காவலர் மைக்கேல் (62), ஓட்டுநர் இயேசு பாதம் (40) ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊழியர்களே பணத்தை எடுத்துக்கொண்டு காலிப் பெட்டிகளைத் தூக்கி வீசினார்களா? அல்லது வெளிநபர்கள் யாரிடமாவது பணத்தைக் கொடுத்துவிட்டு நாடகமாடுகிறார்களா? என்ற கோணத்தில் ஐசிஎப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT