சிங்கப்பெருமாள் கோவில்: புதிதாகக் கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக உதவி மின் பொறியாளர், ஃபோர்மேன் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த பாரேரி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (60). டிரைவரான இவர் தனது வீட்டுக்குப் புதிய மின் இணைப்பு பெறுவதற்காக சிங்கப்பெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்து 3 மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மின் இணைப்புக்காக உதவி மின் பொறியாளர் ஜெயராணியை சம்பத் அணுகியபோது அவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் சம்பத் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ.20 ஆயிரம் பணத்துடன் சம்பத் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அவரிடமிருந்து ஃபோர்மேன் சரவணன் (50)பணத்தைப் பெற்று உதவி மின் பொறியாளர் ஜெயராணியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், இருவரையும் பிடித்தனர். தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு, லஞ்சம் பெற்றதாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.