க்ரைம்

திருத்தணியில் வியாபாரி மீது இரு இளைஞர்கள் தாக்குதல் - போலீஸ் விசாரணை

இரா.நாகராஜன்

திருத்தணி: திருத்தணியில் வடமாநில இளைஞரை 4 சிறுவர்கள் பட்டாக் கத்தியால் தாக்கிய சம்பவத்தால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி அடங்குவதற்குள், இரு இளைஞர்கள் வியாபாரியை தாக்கிய சம்பவத்தால் மீண்டும் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நேரு நகரை சேர்ந்தவர் ஜமால் (40). பழைய பட்டுப் புடவை வியாபாரியான இவர் நேற்று இரவு திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு சென்ற இரு இளைஞர்கள், ஜமாலிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் முற்றியதன் விளைவாக அந்த இளைஞர்கள், ஜமாலை சரமாரியாக கைகளால் தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் விரைந்த போலீஸார், தாக்குதலில் காயமடைந்த ஜமாலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 27-ம் தேதி திருத்தணி ரயில் நிலைய மதில் சுவர் வெளிப்புறத்தில் வடமாநில இளைஞரை சிறுவர்கள் நால்வர் பட்டாக் கத்தியால் தாக்கிய சம்பவத்தால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி அடங்குவதற்குள், இரு இளைஞர்கள் சேர்ந்து வியாபாரியை தாக்கிய சம்பவத்தால் மீண்டும் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கான காரணம் என்ன. தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் போதையில் இருந்தார்களா என்பது குறித்து, அரக்கோணம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT