

வடமாநில இளைஞர் சுராஜ்
சென்னை: கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வடமாநில இளைஞர் சுராஜ், முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆம்புலன்ஸில் அவருடன் செல்லாமல் போலீஸார் அலட்சியமாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ் (30). கடந்த 27-ம் தேதி சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் அவர் பயணம் செய்தார். திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் திருவாலங்காடு அருகே அரிச்சந்திராபுரம், திருத்தணி அருகே உள்ள நெமிலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் என மொத்தம் 4 பேர் பட்டாக் கத்திகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் ரயிலில் ஏறியுள்ளனர்.
அப்போது அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. அங்கு ரயிலில் கதவின் அருகில் அமர்ந்திருந்த வடமாநில இளைஞர் சுராஜை வம்பிழுத்து, பட்டாக்கத்தியை கொண்டு குத்துவது, வெட்டுவது போல் செய்து, செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கொண்டே இருந்தனர்.
ஒருகட்டத்தில் சிறுவர்கள், பட்டாக்கத்திகளால் சுராஜை தாக்கத் தொடங்கினர். இவை அனைத்தையும் அந்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் பார்த்து கொண்டிருந்தனர். சிறுவர்களின் கைகளில் பட்டாக்கத்திகள் இருந்ததால் யாரும் சுராஜை காப்பாற்ற முன்வரவில்லை.
திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும், சுராஜை அடித்து உதைத்து ரயிலில் இருந்து கீழே இறக்கிய சிறுவர்கள், ரயில் நிலைய சுவர் வெளிப்புற பகுதியில் உள்ள மறைவான இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து சுராஜை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தனர். கஞ்சா போதை தலைக்கு ஏறியதை தொடர்ந்து சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்திகளால் சுராஜின் கை, கால், தலை, முகம் என பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். ரத்த வெள்ளத்தில் சுராஜ் கதறினார். ஒருகட்டத்தில் சுராஜ் மயக்கமடைந்தார்.
இவை அனைத்தையும், போதை சிறுவர்கள் செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். சுராஜ் காயங்களுடன் கிடப்பதை பார்த்த ரயில் பயணிகள் சிலர் திருத்தணி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சுராஜை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேல் சிகிச்சைகாக, அவர் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் காயங்கள் இருந்ததால் உடனடியாக உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கடந்த 28-ம் தேதி சுராஜ் அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது ஆம்புலன்ஸில் அவருடன் போலீஸார் துணையாக செல்லாமல், நோ அட்டென்டர் என குறிப்பிட்டு அனுப்பிவைத்துள்ளனர். இதையடுத்து அரசு பொது மருத்துவமனைக்கு தனியாக வந்த சுராஜுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சுராஜ், மருத்துவர்களிடம் தான் ஊருக்குச் செல்வதாக கூறியதாகவும், அவரிடம் மருத்துவர்கள் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கடுமையான வெட்டுக்காயங்களுடன் இருந்ததால், உடனடியாக உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்ட சுராஜ், முழுமையாக சிகிச்சை பெறாமல் சொந்த ஊரான ஒடிசாவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
வைரலாகும் வீடியோ: இதற்கிடையில், சுராஜை ரயிலில் அடிப்பது, திருத்தணியில் மறைவான இடத்தில் வைத்து பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றன. இதனால் தமிழகத்தில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் கூறி இந்த வீடியோக்களை வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்திய அளவில் இந்த வீடியோக்கள் வைரல் ஆகியுள்ளன.
இதனிடையே தமிழக அரசு செய்திக்குறிப்பில், “தாக்குதல் தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். அவ்வாறு பரப்பப்படுவதால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் பயன்படுத்தியதற்கு ஆதாரம் இல்லை: இச்சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாக்குதலுக்குள்ளான நபர், கடந்த ஒன்றரை மாதமாக அரக்கோணம், திருத்தணி, சென்னை என ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார். அவர் வடமாநில தொழிலாளி இல்லை. சுற்றுலா பயணி. தாக்குதலுக்கு உள்ளானவுடன், அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த இளைஞருக்கு தமிழ் தெரியாது என்பதால், அவர் பேசும் மொழி தெரிந்த ஒருவரை அவருக்கு உதவிக்காக வைத்தோம். இந்த தாக்குதல் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 4 சிறுவர்களையும் கடந்த 28-ம் தேதியே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒருவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்தது தொடர்பான தகராறில் தான் இது தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து இன்னும் உறுதியான ஆதாரங்கள் இல்லை.
பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்கு பிறகு தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். அவர் தாமாக முன்வந்து டிஸ்சார்ஜ் பெற்றுக்கொண்டு தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ரயிலில் பட்டாக்கத்தி கொண்டு வந்ததது தொடர்பாக ரயில்வே போலீஸாரும் தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.