கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை நடந்த இடம் (உள்படம்) மாணவி, அவரது நண்பர் வந்த கார்| படங்கள்: ஜெ.மனோகரன்

 
க்ரைம்

‘மூவருக்கும் தொடர்பு’ - கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதான மூவருக்கும் கோவில்பாளையத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 21 வயதான கல்லூரி மாணவியும், அவரது ஆண் நண்பரும் கடந்த மாதம் 2-ம் தேதி இரவு பீளமேடு விமான நிலையம் பின்புறம் காரில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கும்பல் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரணை நடத்தி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி(30), அவரது சகோதரர் கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி(20) ஆகியோரை வெள்ளக்கிணறு பகுதியில் கடந்த 3-ம் தேதி நள்ளிரவு சுட்டுப்பிடித்து கைது செய்தனர். சிகிச்சைக்குப் பின்னர் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது ஆண் நண்பரும் அடையாளம் காட்டினர். கைதான 3 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியிருந்தனர். வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த விவரங்கள், விசாரணையில் கிடைத்த தகவல்கள் உள்ளிட்டவற்றை இணைத்து போலீஸார் குற்றப்பத்திரிகையை தயாரித்தனர்.

50 பக்கங்கள் கொண்ட இந்த முதல்கட்ட குற்றப்பத்திரிகை கோவை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி சிந்து முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. மற்ற விவரங்களுடன் அடுத்தகட்ட குற்றப்பத்திரிகையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

கொலை வழக்கிலும் தொடர்பு: கோவை அருகேயுள்ள குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் தேவராஜ்(55). ஆடு மேய்ப்பவர். கடந்த மாதம் 2-ம் தேதி செரயாம்பாளையம் காட்டில் ஆடு மேய்க்கச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். பொது இடத்தில் மது அருந்த வேண்டாம் என்று தேவராஜ் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மூவரும் கட்டையால் தேவராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தேவராஜ் உயிரிழந்தார்.

போலீஸார் விசாரணையில் தேவராஜ் கொலை வழக்கில் கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோவில்பாளையம் போலீஸார் திட்டமி்ட்டுள்ளனர். அதேபோல, அன்று கோவில்பாளையத்தில் நடந்த இருசக்கர வாகனத் திருட்டு வழக்கிலும் இந்த 3 பேருக்கும் தொடர்பு இருப்பதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT