செந்தில்
மதுரை: மதுரை அருகே அதிமுக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது மனைவியே ஆட்களை வைத்து தீர்த்துக் கட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மனைவி உட்பட 3 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை சிலைமான் அருகே உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரபாண்டியன் என்ற செந்தில் (36). திருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை துணைச் செயலாளரான இவர், சாமநத்தம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு மனைவி காவ்யா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
சாமநத்தம்-நெடுங்குளம் சாலையில் டீக்கடை நடத்தி வந்த செந்தில் நேற்று காலை 6 மணிக்கு கடையைத் திறக்கச் சென்றார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் செந்திலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியது.
தகவலறிந்து வந்த சிலைமான் போலீஸார் செந்தில் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: செந்தில் மனைவி காவ்யா, வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பழகியுள்ளார்.
இதை செந்தில் கண்டித்ததால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வில்லாபுரத்தில் உள்ள காவ்யாவின் தந்தை பேச்சுவார்த்தை நடத்தி, கணவருடன் சேர்ந்து வாழுமாறு நேற்று முன்தினம் மகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கணவர், பெற்றோர் தரப்பில் தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டதால், தான் பழகி வந்த கார்த்திக் மற்றும் 4 பேரைப் பயன்படுத்தி கணவரைக் கொல்ல காவ்யா திட்டமிட்டார்.
இதன்படி, நேற்று அதிகாலை கடைக்குச் சென்ற செந்திலை கார்த்திக் உட்பட 5 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். மதுரை எஸ்.பி. அரவிந்த் கூறும்போது, “செந்தில் மனைவியின் தகாத பழக்கத்தால் இக்கொலை நடந்திருக்கிறது.
இது தொடர்பாக செந்தில் மனைவி காவ்யா, கார்த்திக் உட்பட 3 பேரைப் பிடித்துள்ளோம், மேலும் இருவரை தேடுகிறோம்” என்றார். அதிமுக நிர்வாகி செந்தில் கொலை தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், திமுக அரசை அடியோடு வீழ்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.