சென்னை: முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தமிழக முதல்வர் விஜய் பேசுவது போன்று ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பரவியது.
இந்தி மொழியில் இடம்பெற்றிருந்த அந்த வீடியோவில், ‘பொதுமக்களுக்கு பண உதவி தேவைப்பட்டால் குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளவும்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் இந்த போலி வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாநில சைபர் க்ரைம் போலீஸார் சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, கடந்த 1-ம் தேதி வழக்குப்பதிவு செய்து போலி வீடியோ வெளியிட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர். வீடியோ தொடர்பான போலி சமூக வலைதள ஐ.டி., பதிவுகள் குறித்த தகவல்களும் மெட்டா நிறுவனத்திடம் போலீஸார் கேட்டுள்ளனர்.
மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி வீடியோவை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முதற்கட்ட விசாரணையில், முதல்வர் விஜய் தோற்றத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல ஏஐ வீடியோக்கள் முகநூல் மட்டுமின்றி, பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோக்களில் சில, பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கருதப்படும் முகநூல் கணக்குகள் மூலம் பகிரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். போலி வீடியோக்களை உருவாக்கி பரப்பியவர்களை விரைவில் அடையாளம் கண்டு, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதோடு சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி பதிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். இதுபோன்ற மோசடி வீடியோக்களில் குறிப்பிடப்படும் வாட்ஸ்அப் குழுக்களில் இணையவோ, அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றவோ கூடாது.
முதல்வர் போன்ற தோற்றத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்படும் ‘டீப் ஃபேக்’ வீடியோக்களை உண்மை என நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.