சென்னை: தமிழகத்திலிருந்து கம்போடியாவுக்கு சைபர் அடிமை வேலைக்கு இளைஞர்களை ஏமாற்றி அனுப்பிய, மதுரையைச் சேர்ந்த உணவக உரிமையாளரான முகவரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
அதிக சம்பளத்தில் கம்போடியாவில் வேலை என்ற ஆசை வார்த்தையை நம்பி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், முகவர் மூலம், கம்போடியா நாட்டுக்கு அண்மையில் சென்றார். ஆனால், அங்கு அவர் சைபர் மோசடி கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர், ஒருவழியாக அவர் அங்கிருந்து தப்பி, கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் சென்று முறையிட்டார். பின்னர், அவர் மீட்கப்பட்டு அங்கிருந்து தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டார்.
தமிழகம் வந்தடைந்த அந்த இளைஞர், கம்போடியா நாட்டுக்கு சைபர் அடிமை வேலைக்கு இளைஞர்கள் ஏமாற்றி அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாக தமிழக சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டது.
இதில், தமிழகம் முழுவதும் ஒரு கும்பல் கம்போடியாவில் அதிக சம்பளத்துடன் நல்ல வேலை இருப்பதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, அங்கு கட்டாயப்படுத்தி சைபர் அடிமை வேலை செய்ய வைப்பதும், செய்ய மறுக்கும் இளைஞர்களை சித்திரவதை செய்து துன்புறுத்துவதும், சைபர் அடிமைகளாக செயல்படும் இளைஞர்களை ஆன்லைன் நிதி மோசடி, டிஜிட்டல் கைது உள்ளிட்ட நிதி சார்ந்த மோசடிகளில் ஈடுபட வைத்து சட்டவிரோதமாக பணம் ஈட்டுவதும் தெரிய வந்தது.
திருப்பத்தூர் இளைஞர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தமிழக இளைஞர்களை ஏமாற்றி கம்போடியாவுக்கு அழைத்துச் சென்று சைபர் அடிமையாக்கும் மதுரையைச் சேர்ந்த மதன் வடிவேல் என்ற முகவரை சைபர் க்ரைம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மதன் வடிவேல், கம்போடியாவில் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் 4 உணவகங்களை நடத்தி வருவதும், சைபர் அடிமைகளாக தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழக இளைஞர்கள் முகாமுக்கு உணவு விநியோகம் செய்வதும் தெரிய வந்தது.
மேலும், தமிழகத்தில் இருந்து இளைஞர்களை கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில், மதன் வடிவேல் முக்கிய பங்காற்றியிருப்பதும், இவருடன் கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலைய குடியுரிமைத் துறை அதிகாரிகள், முகவர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்டிருப்பதும் தெரிந்தது.
மேலும், கடந்த 3 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மோசடி முகாம்களுக்கு கடத்தப்பட்டிருப்பதும், இதற்காக முகவர்கள் கமிஷன் பெற்றிருப்பதும் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.