சென்னை: கே.கே.நகர் அடுத்த ஜாபர் கான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சைதை சுகுமார் (47). வழக்கறிஞரான இவர் அதிமுக சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். அதிமுக-வின் தீவிர தொண்டனான சுகுமார், எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ஜாபர்கான் பேட்டையில் பேனர்களை வைத்து விட்டு, நிர்வாகிகள் வீட்டுக்குச் சென்ற நிலையில், மீண்டும் தனது கட்சி அலுவலகத்துக்கு அதிகாலை 3 மணியளவில் வந்துள்ளார்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று அதிகாலை கட்சி அலுவலகத்துக்கு வந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சுகுமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து குமரன் நகர் போலீஸார் நிகழ்விடம் விரைந்து உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதல்கட்ட விசாரணையில் அவருக்கு கடன் நெருக்கடி இருந்திருப்பது தெரிந்தது. இருப்பினும் அவரது தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா, கட்சி பிரச்சினையா, வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.