அஞ்சு கிருஷ்ணா, ஸ்ரீராம்
சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகை, கிரிக்கெட் வீரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை வளசரவாக்கத்தில் கடந்த 4-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸார் மற்றும் வளசரவாக்கம் போலீஸார் ஒருங்கிணைந்து கண்காணித்தனர்.
அப்போது அங்கு காரில் வந்த மாங்காடு, கோவூரைச் சேர்ந்த வெங்க டேஷ்குமார் (31), அதேபகுதி கார்த்திக் ராஜா (31), காட்டுப்பாக்கம் யஷ்வந்த் (25), நெசப்பாக்கம் விக்னேஷ்வரன் (35) ஆகிய 4 பேரை பிடித்து அவர்களிடமிருந்து மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போதைப்பொருள் வைத்திருந்த மேற்கு மாம்பலம் ஸ்ரீராம் (33), கேரளா பாலக்காடு அல்விபின்ஷா (27), வடபழனி வின்சி நிவேதா (26), மண்ணடிதமீம் நிஸ்வான் (27), அதே பகுதிஅஞ்சு கிருஷ்ணா (30) ஆகிய மேலும் 5 பேர் என மொத்தம் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக அவர்களிடமிருந்து 6 கிராம் மெத்தம்பெட்டமைன், 6 கிராம் உயர் ரக கஞ்சா, போதை ஸ்டாம்ப், 10 செல்போன்கள், கார், டைரி பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அஞ்சு கிருஷ்ணா நடிகை என்பதும், வின்சி நிவேதா துணை நடிகை என்பதும், ஸ்ரீராம் கிரிக்கெட் வீரர் என்பதும் தெரிந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “கேரளாவைச் சேர்ந்த அல்விபின்ஷா போதைப் பொருள் மொத்த வியாபாரியாக செயல்பட்டுள்ளார். இவர் பெங்களூருவிலிருந்து கடத்தி வந்துள்ளார். இவருக்கு நைஜீரியாவைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த 30 பேரை ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.
இதேபோல் துணை நடிகை வின்சி நிவேதாவும் போதைப் பொருள் வியாபாரியாக இருந்துள்ளார். அவர் கண்ணாடி பவுச், மணிபர்ஸ், மேக்கப் செட் உள்ளிட்டவற்றில் சிறு பொட்டலங்களாக மறைத்து வைத்திருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தோம்.
இவர் சினிமா துணை இயக்குநர்கள், நடன கலைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் கடந்த 8 மாதங்களாக விற்பனை செய்துள்ளார். மேலும், இந்த கும்பல் அமெரிக்காவிலிருந்து மும்பை வழியாக உயர்ரக வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி வந்து போதை மாத்திரையாக விற்பனை செய்துள்ளது.
இந்த மாத்திரையை ஒருமுறை உட்கொண்டாலே அதற்கு அடிமையாகிவிடுவார்கள். சினிமா, ஐடி நிறுவனத்தினர் மற்றும் செல்வந்தர்களுக்கு இந்த மாத்திரைகள் விற்கப்பட்டுள்ளன. ஒரு மாத்திரை ரூ.3,500 வரை விலை வைத்து விற்பனை செய்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றனர்.