கோப்புப் படம்

 
க்ரைம்

அரவக்குறிச்சி: காதலித்து வந்த பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த இளைஞர் தற்கொலை!

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: அரவக்குறிச்சி அருகே காதலித்து வந்த பள்ளி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலம்பாடியை சேர்ந்தவர் வசந்தகுமார் (26). எலெக்ட்ரிஷியன். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 16 வயது மாணவியும், ஒருவரை ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோரும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து இன்று (நவ. 29ம் தேதி) காலை 10 மணிக்கு மாணவியின் வீட்டிற்கு வந்த வசந்தகுமார் மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்ததில் மாணவி மயங்கியுள்ளார். அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்த வசந்தகுமார் மாணவியின் வீட்டிலேயே சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி வசந்தகுமார் தூக்கில் தொங்குவதை கண்ட கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு பள்ளபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து வசந்தகுமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பள்ளபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT