க்ரைம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்: பூந்தமல்லி வரை சென்றது சிசிடிவியில் பதிவு

இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமான சம்பவத்தில், அவர் பேருந்தில் பூந்தமல்லி வரை சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில் வசிப்பவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 8 வயது மகள் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு தசரா பண்டிகைக்காக சிறுமியின் தாய் தனது சொந்த மாநிலமான ஜார்கண்டுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி, கடந்த 17-ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறி தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு வீடு திரும்பாத சிறுமியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, ஆரனேரி பேருந்து நிறுத்தத்தில் சிறுமி பையுடன் நின்றிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், சிறுமி பூந்தமல்லி பேருந்தில் ஏறியது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அவர் பூந்தமல்லியில் இருந்து எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சிறுமியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமி சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து ரயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்துக்குச் செல்ல முயன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT