திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் லாரி மீது மோதிய விபத்தில் உருக்குலைந்த கார்.

 
க்ரைம்

திருச்சூர் அருகே லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து: திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பரிதாப உயிரிழப்பு

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில், திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் இறுதியாண்டு பயிலும் மதுரை பழைய விளாங்குடியைச் சேர்ந்த ஜோசுவா ஹில்சன் (20), அய்யன்கோட்டை முரளிகிருஷ்ணன் (20), விரகனூர் பிரசன்னா (20), திண்டுக்கல் மாவட்டம் வாழைக்காய்பட்டி சூர்யா (20), ஒட்டன்சத்திரம் களஞ்சிப்பட்டி யுவசஞ்சித் (21), மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பாலகவுண்டன்பட்டி ஜீவா (20), சேலம் மாவட்டம் புதுநல்லகவுண்டன்பட்டி விஷ்வா (20), மதுரை மேலூர் நாவினிபட்டி சந்தோஷ் (20) ஆகிய 8 பேரும் நண்பர்கள். கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் 3 நாட்கள் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

தங்களது நண்பரின் புதிய காரில் கேரளா சென்ற இவர்கள், நேற்று முன்தினம் இரவு குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை விஷ்வா ஓட்டினார். கைப்பமங்கலம் என்ற இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் (எண்: 66) சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்ததால், மாற்றுப் பாதையில் கார் திருப்பிவிடப்பட்டது.

அப்போது, அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரியின் பின்புறம் மோதியது. இதில் கார் முழுவதுமாக நொறுங்கியது. 8 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வலப்பாடு தீயணைப்பு நிலைய வீரர்கள், கார் பாகங்களை வெட்டி எடுத்து உடல்களை மீட்டனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதை, கல்லூரி அடையாள அட்டையின் உதவியுடன் அறிந்த போலீஸார், உடனடியாக இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். விபத்து குறித்து கைப்பமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்துக்கு முன்பு காரில் செல்ஃபி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.

8 மாணவர்களும் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்வதாக சக மாணவர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், சொந்த ஊருக்குச் செல்லாமல் கேரளா சென்றுள்ளனர். அவர்கள் கேரளா சென்ற விவரம் பெற்றோருக்கே தெரியவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நேற்று அதிகாலை திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோரும், உறவினர்களும் புறப்பட்டுச் சென்றனர்.

முதல்வர் விஜய் இரங்கல்: முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT