திருநெல்வேலி: நாங்குநேரி அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் 7 இளைஞர்களை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் விவரம்: தென்னிமலை சுடலைகண்ணு மகன் கண்ணன் (21), முருகன் மகன் சுப்பையா என்ற சுபாஷ் (19), பன்னீர்செல்வம் மகன் அந்தோனி மைக்கேல் (18), சுடலைகண்ணு மகன் கல்யாணி (19), நாங்குநேரி நம்பிநகர் முத்தையா மகன் ராஜா (19), வள்ளியூர் ஆண்டி மகன் உச்சிமாகாளி (20), நெடுங்குளம் முருகன் மகன் வசந்தகுமார் (21).
பின்னணி என்ன? - நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் சரகம் , பெரும்பத்து பஜாரில், நேற்று இரவு பைக்கில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கு டீ கடை அருகே சாலையில் நின்று கொண்டிருந்த, பொதுமக்களை சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் வடமாநில செங்கல் சூளை தொழிலாளி உள்பட இரண்டு பேர் பலியாகினர். கண்மூடித்தனமாக வெட்டியதில் 6 பேருக்கு பலத்த வெட்டுக் காயம் விழுந்தது.
இந்தக் கொடூர தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியை சேர்ந்த ஜான் (42) மற்றும் பெயர் தெரியாத வட மாநில செங்கல் சூளை தொழிலாளி ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன் (58), பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53) ஆகியோர் காயமடைந்தனர்.
மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்ற எதிரிகள், புளியங்குளம் அருகே சென்றபோது அந்தபகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமார் என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.