சென்னை: சென்னையில் பிரபலமான ஆயுர்வேத மருத்துவமனையின் தலைவர் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ‘பாஸ் ஸ்கேம்’ மூலம் ரூ.65 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள பிரபல ஆயுர்வேத மருத்துவமனையின் நிறுவனர் ஒருவரது பெயர், புகைப்படத்தை வாட்ஸ் அப் டி.பி.யாக பயன் படுத்திய மர்மநபர், அவரது செல்போன் எண் போன்று, மருத்துவமனை நிதி மேலாளர் காமேஷை கடந்த 16-ம் தேதி தொடர்பு கொண்டுள்ளார்.
அவசர நிதித் தேவை இருப்பதாக கூறி ரூ.65 லட்சம் அனுப்புமாறு அவர் கேட்டுள்ளார். தலைவரின் உத்தரவு என நம்பிய காமேஷ், மருத்துவமனை இயக்குநரிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி ரூ.65 லட்சம் ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டது பின்னர், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிறுவனரிடம் பணம் வந்ததா எனக் கேட்டபோதுதான், அவர் பணம் அனுப்புமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இது தொடர்பான புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் சென்ற வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், வடமாநிலத்தை சேர்ந்த சைபர் மோசடி கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.