

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் கிலோ ரூ.48க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை, தற்போது ரூ.70 வரை விலை உயர்ந்துள்ளது. 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணமாகும். விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்றவை நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரையின் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும்.
சர்க்கரை விலை உயர்வால் டீ, காபி விலை மீண்டும் உயரும். இதற்கிடையே கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் அரிசி விலையும் ஏறுகிறது.
பொன்னி அரிசி ரூ.80க்கு விற்பனை ஆகிறது. இட்லி அரிசி ரூ.35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் உளுத்தம் பருப்பு கிலோ ரூ.120 லிருந்து ரூ.150 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.