ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை அருகே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் 2022 ஆகஸ்ட் 22-ல் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு, உறவினருடன் காரில் ஊர் திரும்பினார்.
பாலவநத்தம் - கோபாலபுரம் சாலையில் சென்றபோது, பைக்கில் வந்த 7 பேர் கும்பல் உறவினரைத் தாக்கி விட்டு, அந்தப் பெண்ணைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி, கோவிலாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன்(40), மதுரை மாவட்டம் பேரையூர் வெங்கடாசலபுரம் பிரபாகரன்(26), அவரது தம்பி விஜய்(22), ராம்குமார் (20) ஜெயக்குமார்(23), கல்லூரி மாணவர் அழகுமுருகன்(19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 7 பேரைக் கைது செய்தனர்.
பின்னர் சீனிவாசன், பிரபாகரன், விஜய், ராம்குமார், ஜெயக்குமார் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் மீதான வழக்கு இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றம் சுமத்தப்பட்ட சீனிவாசன், பிரபாகரன், விஜய், ராம்குமார், ஜெயக்குமார், அழகுமுருகன் ஆகியோருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், அழகு முருகனுக்கு ரூ.65 ஆயிரம் அபராதமும், மற்ற 5 பேருக்கும் ரூ.70 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
இதில் சம்பந்தப்பட்ட பிரபாகரன் திருமங்கலம் அருகே காவல் நிலையத்தை சூறையாடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.