சென்னை / திருப்பூர்: திருப்பூரில் வங்க தேசத்தினர் 6 பேர் கைதான நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக வேறு யாரேனும் உள்ளனரா என்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், பாதுகாப்பு படையினரை அச்சுறுத்தும் வகையிலும் டெல்லியில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக, திருப்பூரில் முறைகேடாக தங்கியிக்கும் வங்க தேசத்தினர் சிலர் செயல்பட்டதாகக் கூறி டெல்லி போலீஸார் அம்மாபாளையம், பல்லடம், ஊத்துக்குளியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து,டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து, திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் தங்கியுள்ள வடமாநிலத்தவர் மற்றும் சந்தேக நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட 6 பேருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வங்க தேசத்தினர் தங்களை மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றுகூறி திருப்பூர் பனியன் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதால், மேற்குவங்க மாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களில் மத்திய, மாநில உளவுத் துறை போலீஸார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, ஏற்கெனவே கைதானவர்கள் மற்றும் முறைகேடாகத் தங்கியிருந்து கைதானவர்கள் யாரும் தொடர்பில் உள்ளார்களா என்பது தொடர்பாகவும் உளவுத் துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறும்போது, “திருப்பூரில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம், டெல்லி போலீஸார் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். அவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது இனிமேல்தான் தெரியவரும். கடந்த சில மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட வங்க தேசத்தினர் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை அடுத்து, அனைத்து இடங்களிலும் சந்தேகப்படும் நபர்கள் தொடர்பாக ரகசியமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது” என்றார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மட்டுமின்றி, வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவாளர்கள் யாரேனும் உள்ளனரா என்று தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருவதுடன், தமிழகம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இவர்களுக்கு உதவியாக மாநில உளவுப் பிரிவு போலீஸாரும் களத்தில் இறக்கியுள்ளனர். சந்தேக நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களைப் பிடித்து விசாரிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், சந்தேக நபர்கள் குறித்து தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.