சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 55 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸார் ஜவுளி வியாபாரிகள் போல் நடித்து கடத்திய 3 பேரை கைது செய்துள்ளனர்.
டெல்லியிலிருந்து போதை மாத்திரைகள் வாங்கப்பட்டு கூரியர் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அவை வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் கடத்தப்படுவதாக சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட பார்சல் வியாசர்பாடிக்கு வந்து, அங்கிருந்து திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு முகவரிக்கு டெலிவரி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், திருவல்லிக்கேணி போலீஸாருடன் இணைந்து திருவல்லிக்கேணி பச்சையப்பன் தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
பின்னர், அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அதில் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி காந்திஜி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த சையது அபுதாஹிர் (50), சேப்பாக்கத்தைச் சேர்ந்த முகமது ரத்தீஸ் (44), திருவல்லிக்கேணி முத்தருன்னிஸா பேகம் தெருவைச் சேர்ந்த முஜாஹிதீன் (31) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மூவரும் டெல்லியிலிருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, ஜவுளி வியாபாரிகள் போல் நடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் துணி மூட்டைகளுக்குள் மறைத்து கடத்தி வந்ததும், அங்குள்ள சட்டவிரோத கும்பலுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் போலீஸார் சோதனை நடத்தி, மொத்தம் 55,280 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கடத்தலில் மேலும் யாரேனும் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.