பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

சினிமா பாணியில் 5 லட்சம் மோசடி: இரிடியம் தருவதாக ஏமாற்றிய திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

டி.ஜி.ரகுபதி

இரிடியம் தருவதாக வியாபாரியிடம் மோசடி செய்த திமுக பிரமுகர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூரைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). ஆடு வியாபாரி. சோமனூர் அருகேயுள்ள பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் தனபால் (33). இவரும், வியாபாரி சாமிநாதனும் நண்பர்கள்.

தனபால், தனக்கு தெரிந்தவர்களிடம் கோபுர கலசத்துடன் கூடிய இரிடியம் இருப்பதாகவும், இதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் பெருகும் எனவும், இதை வாங்க ரூ.25 லட்சம் செலவாகும் எனவும் சாமிநாதனிடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனபால், தன் நண்பர்கள் திருப்பூர் குமாரசாமி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (38), ராஜா (43) ஆகியோரை கடந்த வாரம் சாமிநாதனிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர்களிடம் கோபுரக் கலசத்துடன் கூடிய இருடியம் வாங்குவதற்காக கடந்த வாரம் சாமிநாதன் ரூ.5 லட்சம் தொகையை கொடுத்துள்ளார். பின்னர், நேற்று (பிப்.5) 3 பேரும் சாமிநாதனை தொடர்பு கொண்டு, இரிடியம் தயாராக இருப்பதாகவும், பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள அம்பேத் நகரில் வைத்து மீதமுள்ள ரூ.20 லட்சத்தை கொடுத்து விட்டு வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

சாமிநாதனும் சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது 3 பேரின் நடவடிக்கையில் சாமிநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் விசாரித்த போது, வெள்ளிக் குடத்தை கோபுர கலசம் போல் வடிவமைத்து, அதில் மண்ணை போட்டு நிரப்பி, அதன் மீது பூஜை செய்யப்பட்டது போல், காவித்துணியைக் கட்டி இரிடியம் இருப்பதாகக் கூறி 3 பேரும் மோசடி செய்தது தெரிந்தது.

இதையடுத்து சாமிநாதன் 3 பேரையும் பிடித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஆறுமுகம், தனபால், ராஜா ஆகியோரை கைது செய்தனர். இதில் ஆறுமுகம் திமுகவில் திருப்பூர் மாவட்ட விவசாயப் பிரிவு துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT