கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உயர்கோபுரம் கட்டுமான பணியின் போது லிஃப்ட் கேபிள் அறுந்து 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
சென்னை, கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், தற்போது உயர் கோபுரம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை கட்டுமானப் பொருட்களை மேலே கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தற் காலிக லிஃப்ட் மூலம், 5 தொழிலாளர்கள் பொருட்களுடன் மேலே சென்று கொண்டிருந்தனர்.
சுமார் 20 அடி உயரத்தில் லிஃப்ட் சென்றபோது, எதிர்பாராத விதமாக அதன் கேபிள் கம்பி அறுந்து லிஃப்ட் கீழே விழுந்ததில், அதில் இருந்த தொழிலாளர்கள் 5 பேரும் பலத்த காயமடைந்து அலறினர். சத்தம் கேட்டு ஓடிவந்த சக தொழிலாளர்கள், உடனடியாக ராயப்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், படுகாயம் அடைந்தவர்கள் மாரியப்பன் (48), மோகன் (38), மகேந்திரன் (48), சம்பத்குமார் (47), கணேசன் (51) என்பதும், இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. தற்போது அவர்கள் 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.