க்ரைம்

பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: ஐவருக்கு ஆயுள்; ஒருவருக்கு 20 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஐயப்பன் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் திருமணமான, பட்டியலினத்தைச் சேர்ந்த 40 வயது பெண். இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, கார் ஐயப்பன் தாங்கல் அருகே தெள்ளியார் அகரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மதுபோதையில் இருந்த 6 பேர் வழி மறித்து, ஓட்டுநர் இளங்கோவை கீழே தள்ளிவிட்டு அந்த காரை ஒட்டிக் சென்றுள்ளனர். தொடர்ந்து, அவர்கள், தெள்ளியார் அகரம்- பாலாஜி நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காரை நிறுத்தியுள்ளனர். பிறகு 6 பேரும், காரில் இருந்த 40 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். மேலும் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து, கார் ஓட்டுநர் இளங்கோ அளித்த புகாரின் பேரில், எஸ்ஆர்எம்சி (போரூர்) போலீஸார் கூட்டு பாலியல் மற்றும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், மதுபோதையில் பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, நகைகளை பறித்து சென்றது தொடர்பாக ஐயப்பன் தாங்கல் சூர்யா என்கிற சூரிய பிரகாஷ் (25), கருப்பையா என்கிற குட்டி (27), சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார் (27), சுபாஷ் (23), அயப்பாக்கம் தினேஷ் (31), காரப்பாக்கம் கணேஷ் (22) ஆகியோரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த விசாரணை, திருவள்ளூர் மாவட்ட முதன்மை, அமர்வு நீதிமன் றத்தில் நடைபெற்று வந்தது. இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபணமாகின. இதையடுத்து, நீதிபதி ஜூலியட் புஷ்பா வழங்கிய தீர்ப்பில், சூரிய பிரகாஷ், தினேஷ், கணேஷ், சந்தோஷ் குமார், சுபாஷ் ஆகியோருக்கு ஆயுள், தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். கருப்பையாவுக்கு 20 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில், பெண்ணுக்கு ரூ.12.50 லட்சம் நிவாரணம், அரசு பள்ளியில் பணி வழங்கப்பட்டுள்ளதாக அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தமிழ் இனியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT