கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள பல்லாக்குளத்தைச் சேர்ந்தவர் குருசாமி (40). லாரி ஓட்டுநரான இவர், குளத்தூர் சுந்தரலிங்கம் நகரில் வசித்து வந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாக குருசாமியை, அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால், தனது 2 குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஒரு பெண்ணை நியமித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை குருசாமி, தனது சகோதரர் முனியசாமியின் மகன்கள் முகிலரசன் (5), சுமித்ரன் (3), சகோதரி முத்துலட்சுமி (48) மற்றும் வேலைக்கு நியமித்த முருகம்மாள் (39) என 5 பேர் குளத்தூரில் இருந்து பல்லாக்குளத்துக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் வைப்பாறு அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சுற்றுலா வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் குருசாமி உட்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநர் பச்சைக்கிளி (55) என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.