கோவை: கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசபெருமாள். அபுதாபியில் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் சமீபத்தில் புகார் அளித்தார்.
அதில், “நான் கடந்தாண்டு கோவை வந்தபோது. சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள் ஆன்லைன் டிரேடிங், பிட்காயின் டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறினர். அதை நம்பி வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் 27 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாயை முதலீடு செய்தேன். ஆனால் லாபம் கிடைக்கவில்லை. அசல் தொகையையும் எடுக்க முடியவில்லை” எனக் கூறியிருந்தார்.
அதன் பேரில், இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி தலைமையிலான மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
அதில், கோவை அறிவொளி நகரைச் சேர்ந்த வசந்த்(20), கோவைப் புதூரைச் சேர்ந்த அஜல்(22), திருப்பூர் கொங்கணகிரியைச் சேர்ந்த ஜனகன்(23), பல்லடத்தைச் சேர்ந்த பரத்(26), மயிலாடுதுறையைச் சேர்ந்த உதயகுமார் (38) ஆகிய 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மேற்கண்ட 5 பேரையும், அடுத்தடுத்து கைது செய்தனர்.
சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, “வசந்த் தனது வங்கி கணக்கை வாடகைக்கு விட்டும், அஜல் கமிஷன் ஏஜென்ட்டாகவும், ஜனகன் வங்கிக் கணக்கு மற்றும் சிம்கார்டுகளை பெற்றுத் தரும் புரோக்கராகவும், உதயகுமார் மக்களிடம் இருந்து பெறப்படும் வங்கிக் கணக்குகளை வெளிநாட்டு நபர்களுக்கு மோசடிக்காக பயன்படுத்த அனுப்பும் ஏஜென்ட்டாகவும் செயல்பட்டுள்ளனர்.
பரத், சாலையோரம் முகாமிட்டு பொதுமக்களிடம் இருந்து ஆதார் அட்டைகளை பெற்று அவர்களுக்கு சிம்கார்டுகளை வழங்கி வருகிறார். அப்போது அவர்களுக்கு தெரியாமல் கூடுதலாக ஒரு சிம்கார்டை எடுத்துக் கொண்டு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளார். இவர்களிடம் இருந்து 200 சிம்கார்டுகள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், 7 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் பயன்படுத்திய வங்கிக் கணக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக 9 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவர்கள் பல்வேறு நபர்களிடம் ரூ.1.5 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் எனத் தெரிகிறது” என்றனர்.