இருளப்பன், வேல்முருகன், பாரதி, பாலமுருகன்

 
க்ரைம்

மானாமதுரை அருகே ஊருக்குள் புகுந்து 4 பேரை வாளால் வெட்டிய 5 பேர் கைது

சிசிடிவி காட்சிகளை அழிக்குமாறு போலீஸார் மிரட்டியதாக புகார்

செய்திப்பிரிவு

மானாமதுரை: மானாமதுரை அருகே ஊருக்குள் புகுந்து பட்டியலினத்தைச் சேர்ந்த 4 பேரை வாளால் வெட்டிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரைச் சேர்ந்த பெயின்டர் ராஜூ (32).

பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், மார்ச் 3-ம் தேதி பிற்பகல் அங்குள்ள கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அங்கு செட்டிக்குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜனுக்கும், வே.புதுக்குளத்தைச் சேர்ந்த மகேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

          

தொடர்ந்து ராஜூவிடமும் மகேஸ்வரன் தகராறு செய்தார். பின்னர் அங்கிருந்து மூவரும் தங்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். ஆனால், ஆத்திரத்தில் இருந்த மகேஸ்வரன் அன்று இரவு, தனது நண்பர்கள் 8 பேருடன் 3 இருசக்கர வாகனத்தில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இடைக்காட்டூரில் ராஜூ வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்தார்.

பின்னர் ராஜூவை வாளால் அந்த கும்பல் வெட்டியது. தடுக்க வந்த ராஜூவின் உறவினர்கள் தினேஷ், ராஜேந்திரன், சுப்பிரமணி ஆகியோரையும் தாக்கியது. பின்னர், செட்டிக்குளம் சென்று, பாண்டியராஜனின் வீட்டையும் அக்கும்பல் அடித்து நொறுக்கியது.

காயமடைந்த ராஜூ உள்ளிட் 4 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து மற்றவர்கள் வீடுகளுக்கு திரும்பிய நிலையில், ராஜூ தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்கு பதிந்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக வி.புதுக்குளத்தைச் சேர்ந்த இருளப்பன் (31), பாலமுருகன் (22), வேல்முருகன் (20), வேம்பத்தூரைச் சேர்ந்த பாரதி (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து காயமடைந்த ராஜூ கூறியதாவது: நான் கடைவீதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 பேர் என்னிடம் சாதியை கேட்டனர். சாதியை கூறியதும், திடீரென என்னை தாக்கினர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் எங்களது குடியிருப்புக்குள் புகுந்த 9 பேர் என்னையும், எனது அண்ணன் உள்ளிட்டோரையும் வெட்டி விட்டு தப்பினர். உடனே போலீஸாரை அழைத்தும், அவர்கள் தாமதமாகத்தான் வந்தனர். முறையாக விசாரிக்கவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

காயமடைந்த ராஜேந்திரன் கூறுகையில், ‘போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அழிக்க சொல்லி மிரட்டினர்.

இன்று (நேற்று) சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வெளியான பிறகு தான் எங்களை தாக்கிய சிலரை கைது செய்துள்ளனர்’ என்றார். இச்சம்பவத்தை பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டித்து உள்ளனர்.

சாதிய மோதல் அல்ல: எஸ்பி விளக்கம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் கூறுகையில், செட்டிக்குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், புதுக்குளத்தைச் சேர்ந்த மகேஸ்வரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த ராஜூ இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த மகேஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இடைக்காட்டூரில் ராஜூவையும், அவரது உறவினர்களையும் தாக்கியுள்ளார். பின்னர் பாண்டியராஜன் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இச்சம்பவம் அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் ஏற்பட்டது தான். சாதிய மோதல் இல்லை. தாக்கியதாக ராஜூ கொடுத்த புகாரில் ஒரு வழக்கும், வீட்டை நொறுக்கியதாக பாண்டியராஜன் மனைவி கொடுத்த புகாரில் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளோம். மற்ற 4 பேரும் விரைவில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT