க்ரைம்

சென்னையில் 2026-ல் இதுவரை ரூ.455 கோடி சைபர் மோசடி: விழிப்புடன் செயல்பட காவல் ஆணையர் அறிவுரை

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னையில் 2026-ல் இதுவரை ரூ.455 கோடி சைபர் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், எனவே பொது மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என காவல் ஆணையர் அமல்ராஜ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை காவலர் குடும்பத்தினரின் நலனுக்காக, ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் மற்றும் மக்கீஸ் கார்டன் காவலர் குடியிருப்பு வளாகங்களில் சிறுவர் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் நடைபயிற்சிப் பாதையுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காக்களை காவல் ஆணையாளர் அமல்ராஜ் இன்று திறந்து வைத்தார்.

ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் 1,036 வீடுகளும், அருகில் உள்ள மக்கீஸ் கார்டன் காவலர் குடியிருப்பில் 92 வீடுகளும் உள்ளன. இங்கு வசிக்கும் காவலர் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கொச்சின் ஹவுஸ் குடியிருப்பில் சுமார் 4,200 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை காவல் ஆணையாளர் அமல்ராஜ் இன்று (நவ. 23) திறந்து வைத்தார்.

அங்கு சிறுவர்கள் விளையாடுவதற்காக சீசா பலகை, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும், பெரியவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான இரும்பு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நடைபயிற்சிக்காக பிரத்யேக நடைபாதையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பூங்காவின் பாதுகாப்புக்காக 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இரவு நேரங்களிலும் பொதுமக்கள் பூங்காவைப் பயன்படுத்தும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கீஸ் கார்டன் காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவையும் காவல் ஆணையாளர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் கூறியதாவது: கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் ரூ.20 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பொழுதுபோக்குவதுடன், சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் திறனை வளர்த்துக்கொள்ளவும் இந்தப் பூங்கா வாய்ப்பாக அமையும். சென்னையில் மொத்தம் 74 இடங்களில் காவலர் குடியிருப்புகள் உள்ளன. இடவசதி மற்றும் தேவைக்கேற்ப மற்ற குடியிருப்புகளிலும் இதுபோன்ற பூங்காக்கள் படிப்படியாக அமைக்கப்படும்.

போலி இணையதளங்களை உருவாக்கி வாகன ஓட்டிகளிடம் பணம் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய சிலரை அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22.30 கோடி ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

சென்னையில் இந்த ஆண்டு இதுவரை சுமார் ரூ.455 கோடி அளவுக்கு சைபர் குற்ற மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதில் சுமார் 20 சதவீத பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளது. சைபர் மோசடிகளைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சைபர் நிதி மோசடியில் பாதிக்கப்படாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டுத் திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், இணை ஆணையர் (தலைமையிடம்) உமா, துணை ஆணையர் ஜெயச்சந்திரன், ஜெயகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT