திருவள்ளூர்/ஆவடி: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கார் மற்றும் மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சாவை நேற்று முன் தினம் போலீஸார் பறிமுதல் செய்து 5 இளைஞர்களை கைது செய் துள்ளனர்.
திருவள்ளூர் எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் மப்பேடு போலீஸார் நேற்று முன்தினம் கண்ணூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வந்த காரை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தபோது சுமார் 6 கிலோ கஞ்சா இருந்ததும், அதை ஆந்திராவில் இருந்து, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ்(24), டோனி கவுதம் (23), அஜித்குமார் (29) ஆகிய 3 பேர் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பின்னால் வந்த மினி லாரியையும் சோதனை செய்தனர். அதில், முந்திரி கழிவு மூட்டைகளின் அடியில் 21 கிலோ கஞ்சாவை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் பாண்டியன்(26), லோகேஷ்(29) ஆகியோர் கடத்தி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில், மாதேஷ் உள்ளிட்ட 5 பேர், ஒடிசா மாநிலத்தில் இருந்து, ரயில் மூலமாக ஆந்திராவுக்கு கஞ்சாவை கடத்தி வந்து, அங்கிருந்து கார் மற்றும் மினி லாரியில் கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 27 கிலோ கஞ்சா, மினி லாரி, கார், 5 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
17 கிலோ பறிமுதல்
சென்னை, அம்பத்தூர்- ஒரகடம் பகுதியில் நேற்று காலை அம்பத்தூர் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சுற்றித் திரிந்த, ஆவடி சிந்து நகரைச் சேர்ந்த மகேஷ் (23), பட்டாபிராம் - அண்ணா நகரைச் சேர்ந்த அஜய் குமார் (19) ஆகியோரின் கைப்பைகளை போலீஸார் சோதனை செய்தபோது 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், திருப்பதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அதே போல அம்பத்தூர்- சண்முகபுரம் புழல் ஏரிக்கரை பகுதியில் நேற்று போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்மனை(29) போலீஸார் சோதனை செய்ததில், ஆந்திர மாநிலத்தில் இருந்து, 7 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. மகேஷ், அஜய்குமார், நரசிம் மனை கைது செய்து, 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.