உயிரிழந்த சிறார்கள் மோசிகரன், யோகவர்ஷினி, அனன்யா, தனு.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வேன் மோதியதில் 4 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்தனர். இதைப்பார்த்து மயங்கிவிழுந்த பாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த, பழனிச்சாமி மனைவி அஞ்சம்மாள். இவர், கணவாய் மேடு பகுதியில் சாலையோரம் ஞாயிறு பிற்பகல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். இவரது உறவினரின் குழந்தைகள் அவருடன் சென்று சாலையோரமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது மோதியது. இதில், நாகராஜ் மகள்கள் யோக வர்ஷினி (11), அனன்யா (6), ஜெகதீசன் மகள் தனுஸ்ரீ (5), சின்னதம்பி மகன் மோசிகரன் (6) ஆகியோர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். இதை பார்த்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அஞ்சம்மாள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய வேன் நிற்காமல் சென்றது.
பின்னர், சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடி விட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடமதுரை போலீஸார், 4 சிறார்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ச்சியில் மயக்கமடைந்த அஞ்சம்மாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து வட மதுரைபோலீஸார் வழக்குப் பதிவு செய்து, பால் வேன் ஓட்டுநர் குருந்தம்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமாரை போஸீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.