பிரதிநிதித்துவப் படம்
திருத்தணி: திருத்தணியில் தன் கழுத்தில் பட்டாக்கத்தி வைத்து ரீல்ஸ் வெளியிட்டதை தட்டிக் கேட்ட வடமாநில இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்துக்கு வெளியே நேற்று முன்தினம் கை, கால், தலை மற்றும் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு படுகாயங்களுடன் வடமாநில இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக் கண்ட அங்கிருந்த ரயில் பயணிகள், திருத்தணி போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த போலீஸார், படுகாயங்களுடன் கிடந்த வடமாநில இளைஞரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அந்த இளைஞர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரை சேர்ந்த சுராஜ் (34), சென்னையில் இருந்து திருத்தணிக்கு நேற்றுமுன்தினம் மின்சார ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது, திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் திருவாலங்காடு அருகே அரிச்சந்திராபுரம், திருத்தணி அருகே உள்ள நெமிலி ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் என, 4 சிறுவர்கள் சுராஜின் கழுத்தில் கத்தியை வைத்து, மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து, சமூக வலை தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இதனை அவர் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது, கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்களும், சுராஜை பட்டாக் கத்தியால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து, ரயில் திருத்தணி ரயில் நிலையம் வந்த பிறகு 4 சிறுவர்களும், சுராஜை ரயில் நிலைய மதில் சுவர் வெளிப்புற பகுதியில் உள்ள மறைவான இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, அவரை மீண்டும் பட்டாக் கத்தியால் தாக்கி, அதனையும் வீடியோ எடுத்து, ரீல்ஸாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு விசாரணையில் தெரிய வந்ததாக, போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீஸார், சுராஜ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 சிறுவர்களை நேற்று கைது செய்தனர்.