விபத்து 

 
க்ரைம்

எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னை கொளத்தூர் வெற்றி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (45). இவர் தனது மனைவி வனிதா (37), மகள் சந்தியா (15), பிரதீப் குமார் (13), உறவினர் வசந்தி (40) ஆகியோர் திருச்செந்தூருக்கு காரில் கடந்த 11-ம் தேதி புறப்பட்டனர். காரை அதே பகுதியைச் சேர்ந்த பழனி (45) என்பவர் ஓட்டினார். இன்று காலை திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு புறப்பட்டனர்.

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் எட்டயபுரத்தை கடந்து கோட்டூர் விலக்கு பகுதியில் சென்றபோது, சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில், பாஸ்கரன், அவரது மனைவி வனிதா, உறவினர் வசந்தி, ஓட்டுநர் பழனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

          

தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் போலீஸார் விபத்தில் காயமடைந்த சந்தியா, பிரதீப் குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா, விளாத்திகுளம் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக எட்டயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT