சென்னை: அமமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். வியாசர்பாடி, இந்திராகாந்தி நகர் மெயின் தெருவில் வசிப்பவர் பாலமுருகன் (47).
அமமுக நிர்வாகி. இவர் எண்ணெய் வியாபாரம் செய்து வருவதோடு, அத்தோ கடையும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அத்தோ கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த போதை கும்பல் ஒன்று ஹெல்மெட்டால் சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை சேதப்படுத்தியவாறும், கூச்சலிட்டவாறும் சென்றுள்ளது. மேலும், பாலமுருகன் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியை எட்டி உதைத்துள்ளது.
இதை அவரது குடும்பத்தினர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3.35 மணியளவில் இருசக்கர வாகனங்களில் வந்த அதே கும்பல் அடுத்தடுத்து பாலமுருகன் வீட்டு வளாகத்துக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியது.
பெட்ரோல் குண்டுகள் வீட்டின் முன்பும், முதல் மாடியின் பால்கனி மீதும் விழுந்து தீப்பற்றி எரிந்தது. கண் விழித்து எழுந்த பாலமுருகன், உடனடியாக தீயை அணைத்து விட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, எம்கேபி நகர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்தனர்.
இதில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக தனுஷ்ராஜ், மோனிஷ்ராஜ், ஸ்டீபன், சந்தோஷ் குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், இவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.