சென்னை: தமிழகத்தை போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ஒரு நாள் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. இதில் 344 பேர் கைது செய்யப்பட்டனர்.
டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு போலீஸ் குழுவினர் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் மொத்தம் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 344 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த 64 குற்றவாளிகளும் பிடிபட்டனர். மேலும், 44 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்த சோதனையில் 242.2 கிலோ கஞ்சா, 2,143 போதை மாத்திரைகள் உட்பட ஏராளமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை நடைபெறும் 3,242 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டன.
இதில் 1,367 இடங்கள் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருப்பது தெரிய வந்தது. அப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் உட்பட 357 ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸார் இணைந்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.
இதில் 104.361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 890 மாணவர் விடுதிகளிலும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதவிர, 1,770 போதைப் பொருள் வழக்குகளில் புலன் விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளது. 804 வழக்குகளில் குற்றவாளிகளின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட 6,958 கிலோ கஞ்சா, 250 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை அழிக்கப்பட்டன. மேலும், 175 மறுவாழ்வு மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்காக பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 3,972 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எல்லை சோதனைச் சாவடிகளில் 23,744 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் கஞ்சா, 62.1 கிலோ குட்கா, 73.960 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல், சொத்து முடக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.