

பிரகாசம்
திருப்பத்தூர்: அரசு வேலை, பணி இடமாறுதல் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6.30 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீலின் உதவியாளராக இருந்த பிரகாசம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி எம்எல்ஏவாக இருந்த நிலோபர் கபீல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது அவரது உதவியாளராக வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பிரகாசம் என்பவர் பணியாற்றி வந்தார்.
அமைச்சரின் உதவியாளராக இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்கள், பணி இடமாறுதலுக்காக முயற்சித்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சேர்ந்த 68 பேரிடம் பிரகாசம் பல்வேறு தவணைகளாக ரூ.6 கோடியே 30 லட்சம் வரை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்குள்ளாக அதிமுக ஆட்சியும் முடிவுக்கு வந்தது. நிலோபர் கபீல் அமைச்சர் பதவியையும் இழந்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த பணம் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது பிரகாசத்திடம் உரிய பதில் கிடைக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் பிரகாசம் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.