சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட பாம்பு உள்ளிட்ட 31 அரிய வகை உயிரினங்களை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, நேற்றுமுன்தினம் நள்ளிரவு சென்னை வந்த விமானத்தில் இருந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர்.
குறிப்பாக, சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு உடனடியாகத் திரும்பும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை மடக்கி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால், அவரது பெரிய சூட்கேஸைத் திறந்து சோதனையிட்டனர்.
அப்போது, சூட்கேஸுக்குள் உயிரினங்கள் சுவாசிப்பதற்காகச் சிறிய துளைகள் இடப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே பார்த்தபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரிய வகை பாம்புகள், ஆமைகள் மற்றும் பல்லிகள் உயிருடன் ஊர்ந்து கொண்டிருந்தது தெரிந்தது.
குறிப்பாக, ஆப்பிரிக்கா மற்றும் சகாரா பகுதிகளில் வசிக்கும் அபூர்வ வகை சல்கட்டா ஆமைகள் 9, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளை சேர்ந்த அரிய வகை பல்லிகள் 4, கிழக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஈஸ்டர்ன் வாட்டர் டிராகன் ஒன்று, ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட விஷமற்ற ராயல் பைத்தான் மலைப் பாம்புகள் 12, கருப்பு நிறமும் சிவப்பு கண்களும் கொண்ட ஆப்பிரிக்க இன அல்பைனோ கார்ன் பாம்பு ஒன்று, ஆஸ்திரேலிய இனத்தை சேர்ந்த நீல நாக்கு உடும்புகள் 3, வெள்ளை நிற அரச நாகம் என்று அழைக்கப்படும் கொடிய விஷம் வாய்ந்த ஒயிட்சைட் கிங் பாம்பு ஒன்று என உலக அளவில் அழிந்து வரும் நிலையில் உள்ள 31 அரிய வகை உயிரினங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘ஆடம்பர பங்களாக்களில் வசிப்பவர்கள் இவற்றைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கும், வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையிலும் பல லட்சங்கள் கொடுத்து வாங்குகின்றனர். இதற்காகவே இந்த உயிரினங்கள் கடத்தி வரப்பட்டுள்ளன’ என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, வெளிநாட்டு உயிரினங்கள் மூலம் புதிய வகை வைரஸ்கள் அல்லது நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் இருப்பதால், மத்திய சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி, இவை அனைத்தும் வந்த விமானத்திலேயே மீண்டும் தாய்லாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞர் மீது சுங்கச் சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை ‘கடத்தல் குருவி’யாகப் பயன்படுத்தி, பின்னணியில் இருந்து இயக்கிய முக்கிய குற்றவாளியைத் தேடும் பணியில் சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.