சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள மொபைல் ஹார்டுவேர் விற்பனை நிலையத்தில் இந்திய தர நிர்ணய கழக (BIS) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், 300-க்கும் மேற்பட்ட போலி மொபைல் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேளச்சேரியில் உள்ள ஒரு கடையில் பிஐஎஸ் தரநிலை முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த 22-ம் தேதி பிஐஎஸ் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது லித்தியம்-பாலிமர் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் அச்சிடப்பட்டிருந்த பிஐஎஸ் பதிவு எண்கள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எண்கள் வேறு பிராண்டுகளுக்கு வழங்கப்பட்டவை அல்லது செல்லுபடியாகாதவை எனத் தெரிந்ததை அடுத்து, சுமார் 300 பேட்டரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பிஐஎஸ் சென்னை கிளையின் மூத்த இயக்குநர் எஸ்.டி.தயானந்த் கூறுகையில், “மின்னணுப் பொருட்களை வாங்கும்போது, வெறும் முத்திரையை மட்டும் நம்பாமல், அது உண்மையானது தானா என்பதை ‘பிஐஎஸ் கேர்’ செயலி மூலம் நுகர்வோர் சரிபார்த்து வாங்க வேண்டும். தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும்" என்றார்.