அபுல் உசேன் ஷேக், ராஜேந்திர குமார் மீனா
சென்னை: பிரீமியம் கிரெடிட் கார்டு பெற்றுத் தருவதாக கூறியும், ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும் என ஆசை காட்டியும் சென்னையில் 2 பேரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வெளி மாநில இளைஞர்களை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன் (34) என்பவரை கடந்த ஏப்.23-ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் பல்வேறு சலுகைகளுடன் கூடிய பிரபல வங்கியின் பிரீமியம் கிரெடிட் கார்டு பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.
வாட்ஸ்அப் மூலம் ஒரு லிங்க்கையும் அனுப்பிய அவர், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் விரைவில் பிரீமியம் கிரெடிட் கார்டு கிடைக்கும் என்று கூறியுள்ளார். கீர்த்திவாசனும் தனது வங்கி மற்றும் தனிப்பட்ட விவரங்களை அதில் பதிவு செய்துள்ளார்.
மறுநாள் புதிய செல்போன் ஒன்றை அனுப்பி வைத்த நபர், 2-வது கட்ட சரிபார்ப்புக்காக அதில் அவரது சிம் கார்டை பொருத்துமாறு கூறியுள்ளார்.
அதன்படி, அந்த செல்போனில் சிம் கார்டை கீர்த்திவாசன் பொருத்திய சிறிது நேரத்திலேயே, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம், கிரெடிட் கார்டு மூலம் ரூ.7.60 லட்சம் என மொத்தம் ரூ.17.60 லட்சம் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தேசிய சைபர் க்ரைம் புகார் இணையதளம் மற்றும் சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸில் கீர்த்திவாசன் புகார் செய்தார்.
இதன்பேரில், கிழக்கு மண்டல சைபர் க்ரைம் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் செல்போன் எண்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், மோசடியில் ஈடுபட்ட நபர் மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கு வங்கம் விரைந்த தனிப்படையினர், அங்குள்ள போலீஸாரின் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, முர்ஷிதாபாத் மாவட்டம் நவ்தா பகுதியைச் சேர்ந்த அபுல உசேன் ஷேக் (26) என்பவரை கடந்த 6-ம் தேதி கைது செய்தனர்.
ஜப்பான் நிறுவனம் என மோசடி
திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் பாலாஜி (54). இவர் கடந்த மே 28-ம் தேதி மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் தொடர்பான வர்த்தக வாய்ப்புகள் குறித்து இணையதளத்தில் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது இணையதளத்தில் கிடைத்த ஒரு வணிக நிறுவனத்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசியவர்கள் தாங்கள் ஜப்பான் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
குறிப்பிட்ட இணையதளத்தில் இணைந்து வர்த்தகத்தை தொடங்கினால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினர். வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதை நம்பிய ஜெகநாதன் பாலாஜி, அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 4 தவணைகளாக மொத்தம் ரூ.13 லட்சம் அனுப்பியுள்ளார்.
ஆரம்பத்தில் சிறிய தொகையை லாபமாக வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்திய மர்ம நபர்கள், திடீரென அவருடனான தொடர்பை துண்டித்தனர். வர்த்தகத்துக்காக பயன்படுத்தப்பட்ட இணையதளத்தையும் முடக்கினர்.
புகாரின்பேரில், சென்னை காவல் துறையின் கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன் எண்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இதில், மோசடியில் ஈடுபட்ட நபர் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த தனிப்படையினர், அங்குள்ள ராம்பச்வாரா போலீஸாரின் உதவியுடன் கண்காணித்து, தவுசா மாவட்டம் ஹேம்லிவாலா பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர குமார் மீனா (35) என்பவரை கடந்த 4-ம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஐபோன் உட்பட 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.