விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், விசாரணை என்ற பெயரில் தங்களை அடித்து துன்புறுத்தியதாக விழுப்புரம் எஸ்.பி.யிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த அக்டோபர் 12-ம் தேதி மாயமானார். உள்ளூர் போலீஸார் விசாரணையில் திருப்தி இல்லாததால், வழக்கை சிபிசிஐடியிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. உள்ளூர் போலீஸார் சேகரித்த தடயங்கள், செல்போன் டவரில் பதிவான அழைப்புகளின் விவரங்களை பெற்று சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
சிறுமி காணாமல் போய் 50 நாட்களை நெருங்கும் நிலையில், அவரை கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீஸார் திணறி வருகின்றனர். அறிவியல் பூர்வமான தடயம் கிடைக்காததால், விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
தொடக்க நிலையிலேயே வழக்கின் விசாரணை உள்ளது. சிபிசிஐடியிடம் வழக்கை ஒப்படைத்தால், திருப்பம் ஏற்படும் என எதிர்பார்த்த அரசுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இதனால், வழக்கை முடிக்க வேண்டிய கட்டாயம் சிபிசிஐடி தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளூர் மக்கள் மீது சிபிசிஐடியின் பார்வை திரும்பி இருக்கிறது. பெண்கள், இளைஞர்கள் என பலரையும் பிடித்து வந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பலரையும், பல்வேறு துன்புறுத்தலுக்கு சிபிசிஐடி போலீஸார் ஆளாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில், சிபிசிஐடி போலீஸார் தங்களை அடித்து சித்ரவதை செய்ததாக விழுப்புரம் எஸ்.பி. மதிவாணனிடம் ஆலம்பூண்டி ஊராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் ராஜ்குமார் (26),கமல்ராஜ் (25), ரேணு (30) ஆகியோர் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.
மனுவில் அவர்கள், “விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு எங்கள் 3 பேரையும் கடந்த ஒரு வாரமாக, விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்துகின்றனர். இந்த சம்பவத்தை நாங்கள் செய்ததாக ஒத்துக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இரு கைகளையும் மேலே தூக்கி, எங்களது சட்டையால் கட்டி, லத்தி மற்றும் பைப்பால் அடித்தனர். பாதம், முதுகு பகுதியில் அடிக்கின்றனர். ஆசன வாயிலும் லத்தியை விட்டு குத்துகின்றனர்.
‘ரூ.2 லட்சம் கொடுக்கிறோம், குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ளுங்கள்’ என கூறி அடித்தனர். ஆபாசமாக திட்டுகின்றனர். சிபிசிஐடி போலீஸாரின் துன்புறுத்தலால், எங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு எங்களது மனநிலை இருக்கிறது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.