க்ரைம்

ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ.3.4 கோடி மோசடி: சுய உதவிக்குழு பெண்கள் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: அடையாறு பகுதியில் வசித்து வருபவர் சத்தியநாதன் (68). தனியார் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சமூக வலைதளங்களில் வந்த ஆன்லைன் முதலீட்டு விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில் இரட்டிப்பு லாபம் கிடைக்க ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை உண்மையென நம்பிய அவர்கள் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். பின்னர் அவர்கள் தெரிவித்தபடி, மொபைல் செய லியை பதிவிறக்கம் செய்து, கடந்த ஜூலை 7 முதல் 25-ம் தேதி வரை அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3 கோடியே 40 லட்சத்தை மோசடிக்காரர்கள் கொடுத்த 13 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்தார்.

ஆனால் அவர் மேற்கொண்ட ஆன்லைன் முதலீட்டுக்கு லாபம் கிடைக்கவில்லை. மேலும் முதலீடு செய்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. மாறாக அவர் பதிவிறக்கம் செய்த மொபைல் செயலி முழுவதுமாக முடக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் க்ரைம் இணையதளம் வாயிலாக புகார் தெரிவித்தார்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் மோசடிக்காரர்களுக்கு முகவர்களாக செயல்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பால சுப்ரமணியன் (51) கடந்த மாதம் 22-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி மாவட்டம் மேலூரைச் சேர்ந்த முருகேஷ் (49), அதே மாவட்டம் சங்கரபேரியைச் சேர்ந்த எப்சி (35), திருச்செந்தூரைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (33) ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோசடிக்காரர்கள், மோசடி மூலம் பெற்ற பணத்தை பெற தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியுள்ளனர். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கொடுத்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களில் எப்சி மற்றும் பஞ்சவர்ணம் சுய உதவிக் குழுக்களில் உள்ளனர்.

இவர்கள் தங்கள் கணக்குக்கு வரும் மோசடி பணத்தை எடுத்து மோசடிக்காரர்களிடமே ஒப்படைத்துள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட நபர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT