தூத்துக்குடி: கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஜாகீர் உசேன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீகார்த்திக் (12), கீதாஜீவன் நகரைச் சேர்ந்த வனராஜன் மகன் திருமணி (13), கதிரேசன் மகன் முகேந்திரன் (12) உள்ளிட்ட 9 சிறுவர்கள் நேற்று கடலில் குளிப்பதற்காக தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலை 4 சிறுவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை மட்டும் மீனவர் ஒருவர் சிறிய படகில் சென்று மீட்டு, கரைக்கு அழைத்து வந்துள்ளார்.
அதே நேரத்தில் மற்ற 3 சிறுவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த தாளமுத்து நகர் போலீஸார் மற்றும் தருவைகுளம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் படகில் சென்று, சிறுவர்களை தீவிரமாக தேடினர். எனினும், சிறுவர்களை மீட்க முடியவில்லை. அவர்கள் மூவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
பின்னர், சிறுவர்கள் நரேன் ஸ்ரீகார்த்திக், திருமணி, முகேந்திரன் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதுகுறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களும் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.