

தென்காசியில் நடைபெற்ற ஆன்மிக விழாவில் பேசினார் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்.
தென்காசி: திமுக ஆட்சியில் 11 ஆதீனங்களை இல்லாமல் ஆக்கிவிட்டனர். 56 ஆதீனங்கள் இருந்த நிலையில் தற்போது 45 ஆதீனங்கள் மட்டுமே உள்ளன என்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
தென்காசியில் ‘ஆலயம் காக்க ஆன்மிக ஒருங்கிணைப்பு’ விழா முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்றது. விழாவை செண்பகராம கணேசன் தொடங்கிவைத்தார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், தென்பாரத திருக்கோயில் அமைப்பாளர் சரவண கார்த்திக், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் மற்றும் மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், “கோயில்கள் மீதான நிர்வாக வரியை குறைக்க வேண்டும். ஆடிட் வரியை ரத்து செய்ய வேண்டும். தான் முதல்வரானால் கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு பட்டா வழங்குவதாக பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால், தேர்தலில் அவருக்கு அளிக்கும் ஆதரவு மறு பரிசீலனை செய்யப்படும்.
கோசாலை அமைக்க வேண்டும்: காலமான அரசியல்வாதிகளின் பிறந்த நாளில் கோயில்களில் சிறப்பு பூஜை, சிறப்பு விருந்து அளிப்பதை ரத்து செய்ய வேண்டும். கோயில் நிலங்களில் அரசு கட்டிடங்கள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி, நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். கோயில்களில் அபிஷேகத்துக்கு நாட்டு மாட்டுப் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்காக கோயில்களில் கோசாலை அமைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
அர்ச்சகர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.900 வழங்க வேண்டும். 700 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த கோயில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு ரூ.1,500 சம்பளம் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பொன் மாணிக்கவேல் கூறியதாவது: திமுக ஆட்சியில் 11 ஆதீனங்களை இல்லாமல் போகச் செய்துவிட்டனர். முன்பு 56 ஆதினங்கள் இருந்த நிலையில், இப்போது 45 ஆதினங்கள்தான் உள்ளன.
கோயில் நிலங்களின் வருவாயைப் பெருக்குவதுதான் கோயில் செயல் அலுவலரின் வேலை. கோயில் கருவறையில் சென்று வேலைபார்க்க அறநிலையத் துறையினருக்கு உரிமை இல்லை. இதை தட்டிக் கேட்க ஆட்கள் கிடையாது.
கோயிலுக்கு வெளியில்தான் செயல் அலுவலர் அலுவலகம் இருக்க வேண்டும். கோயிலுக்குள் செயல் அலுவலர் அலுவலகம் வைத்திருப்பதற்கு, ஏன் வாடகை கொடுக்கவில்லை? கோயில்களுக்கு வரி விதிக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வாதாட, சரியான வழக்கறிஞர்கள் இல்லை.
சில ஜாதிக் கட்சிகள் என்ன குற்றம் செய்தாலும், அதிகாரத்துக்கு அருகில் இருப்பதால், அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்துக்களிடம் ஒற்றுமை இல்லை. இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.