சென்னை: புனித தோமையர் மலை காவல் மாவட்டம் ஆதம்பாக்கத்தில் கடந்த 17-ம் தேதி போலீஸார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஈகிள் ஷோரூம், தில்லை கங்கா நகர் காவல் உதவி மையம், இ.பி. காலனி காவல் உதவி மையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் 390 வாகனங்களை போலீஸார் தணிக்கை செய்தனர். சந்தேகத்திற்குரிய 32 வாகனங்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். மேலும், 35 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், 21 பேரிடம் உரிய விசாரணை, அடையாள சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருந்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா என்ற குருவி சூர்யா (27), அஜய் (27), விக்னேஷ் (19) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதில், கைது செய்யப்பட்ட சூர்யா என்ற குருவி சூர்யா, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தின் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், அவர் மீது ஏற்கெனவே 43 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் கடந்த 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.