சென்னை: புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழக அரசின் வங்கிக் கணக்கிலும் ரூ.22 கோடி டிஜிட்டல் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் என 260 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு 3 மாதத்துக்கான சம்பளம் வழங்க ரூ.8.16 கோடி நிதி விடுவிக்கப்பட்டு அரசு கருவூலம் மூலம் கல்லூரியின் வங்கிக் கணக்குக்கு கடந்த 3-ம் தேதிஇரவு வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கல்லூரி நிர்வாக வங்கிக் கணக்கில் ஏற்கெனவே இருந்த பணத்துடன் சேர்த்து ரூ.8.85 கோடி திடீரென மாயமானது. கருவூலத்தில் இருந்து பணம் வரவு வைக்கப்பட்ட 2 மணி நேரத்தில் இந்தபணம் டிஜிட்டல் முறையில் திருடப்பட்டது. அம்மாநில சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோசடி கும்பல் செயல்பட்டது தெரியவந்தது. வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதேபோல, தமிழக ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் இருந்தும் டிஜிட்டல் முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.10 கோடி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடி என மொத்தம் ரூ.22.10 கோடி அரசு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிதி, 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சுகாதார நல மையங்கள் கட்டுவதற்கான திட்டத்துடன் தொடர்புடையது. தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளிலும் தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நல மையக் கட்டிடங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க ஊரக வளர்ச்சித் துறையில் மாநில அளவிலான ஒற்றை மைய வங்கிக் கணக்கு பராமரிக்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் பணிகள் நிறைவு அறிக்கையை அளித்த பிறகே சம்பந்தப்பட்ட நிதி விடுவிக்கப்படும். அதை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. சென்னையில் இருந்து நிர்வகிக்கப்படும் இந்த வங்கிக் கணக்குகளில் இணைய வழியாக ஊடுருவி, பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பணம் மாற்றப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
புதுச்சேரி, தமிழகத்தில் நடந்துள்ள இந்த மோசடிகளின் பின்னணியில் நைஜீரியாவைச் சேர்ந்த சைபர் க்ரைம் கும்பல்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக சைபர்க்ரைம் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.