சென்னை: மதுரவாயல் பகுதியில் வசித்த கூலித்தொழிலாளிக்கு 3 மகள்கள் உள்ளனர். பெற்றோர் வேலைக்கு செல்லும் நேரங்களில் அந்த சிறுமிகள் தங்களது பாட்டியின் கண்காணிப்பில் வீட்டில் இருப்பது வழக்கம்.
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியி்ல் 14 வயது மூத்த மகளை, அப்பகுதியில் வசித்த 21 வயது இளைஞர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் தேடிய நிலையில், அந்த சிறுமி வெகு நேரத்துக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து விசாரித்த பெற்றோர், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பத்மா முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி குற்றத்தை நிரூபித்தார்.
அதையடுத்து நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.