சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து நேபாளத்தை சேர்ந்த விசாரணை கைதி மற்றும் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற கைதி என அடுத்தடுத்து 2 பேர் தப்பி ஓடியது குறித்து புழல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தினமும் காலையில் அறைகளில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவதும், மாலையில் மீண்டும் அறைகளில் அடைக்கப்படுவதும் வழக்கம். சென்னை பாடி கலைவாணி நகரில் தங்கி வேலை பார்த்து வந்த நேபாள நாட்டை சேர்ந்த சுதீப் போகாத்தீ (23) என்பவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் திருட்டு வழக்கு தொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீஸார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கைதிகளை மீண்டும் அறைகளில் அடைப்பதற்காக சிறை ஊழியர்கள் எண்ணிக்கை சரிபார்த்தனர்.
அப்போது சுதீப் போகாத்தீ மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை ஊழியர்கள், சிறை வளாகம் முழுவதும் தேடினர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு கைதியும் தப்பினார்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், புழல் மத்திய சிறையில் இருந்து மேலும் ஒரு தண்டனை கைதி தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (41) என்பவரை, கடந்த 2021-ம் ஆண்டு போக்சோ வழக்கில் திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்ததை தொடர்ந்து, புழல் மத்திய சிறை-1-ல் அடைக்கப்பட்டார். சுமார் 5 ஆண்டுகளாக சிறையில் நன்னடத்தையுடன் இருந்து வந்ததால், சிறை நிர்வாகம் அவருக்கு நன்னடத்தை அடிப்படையில் சிறை அங்காடியில் பணிபுரிய அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதன்படி, தினமும் காலையில் சிறைக்கு வெளியே உள்ள அங்காடிக்கு சென்று சிறை ஊழியர்களுக்கு உதவியாக வேலை பார்த்துவிட்டு மீண்டும் சிறைக்கு திரும்புவது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை 7 மணியளவில் அங்காடிக்கு வேலைக்கு சென்ற சுரேஷ், காலை 10 மணியளவில் சிறை காவலர்கள் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தண்டனை கைதி சுரேஷ் தப்பிச் சென்றது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் புழல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுரேஷை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும், அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன்கள் மற்றும் ஊழியர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு கொண்ட புழல் மத்திய சிறையில் இருந்து அடுத்தடுத்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.