கஞ்சா கடத்தியதாக கைதானவர்கள்.
சென்னை: அரிசி மூட்டைகளுக்கு இடையே பதுக்கி வைத்து, ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு ரூ.2.65 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்த இருவரை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே போலீஸார் கண்காணித்தனர்.
அப்போது அந்த வழியாக ஆந்திராவிலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தமிழகம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதித்தனர். அப்போது அரிசி மூட்டைகளுக்கு இடையே பண்டல் பண்டலாக சுமார் 530 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸார் கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த கோட்டகுண்டு ஜகதீஷ்வர் ராவ், அதே மாநிலத்தைச் சேர்ந்த பாங்கி கோவர்தன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த கஞ்சாவின் சந்தை மதிப்பு ரூ.2.65 கோடி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பல் குறித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.