சேலம்: சேலத்தில் மதுபோதையில் இருந்த 3 சிறுவர்கள் மற்றொரு சிறுவனை கொடூராக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 சிறுவர்களையும் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சேலம் மணியனூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுவன் மற்றும் மணியனூரில் வசிக்கும் பிஹாரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் நண்பர்கள்.
இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு மல்லூர் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் மது அருந்தியுள்ளனர். அவர்களுடன் ஏற்கெனவே பழக்கம் உள்ள பிளஸ் 1 படிக்கும் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கோகுல் (17) என்ற சிறுவனும் வந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த 3 சிறுவர்களுக்கும், கோகுலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 சிறுவர்களும் சேர்ந்து கோகுலை கத்தியால் குத்தியும், முகத்தை சிதைத்தும் கொலை செய்துள்ளனர். பின்னர், சிறுவனின் உடலை வைத்து வீடியோ எடுத்து கூச்சலிட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்த நிலையில், 3 சிறுவர்களும் அங்கிருந்து ஓட முயன்றுள்ளனர். அவர்களில் 2 பேரை பிடித்து மல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கொலையான கோகுலின் உடலை போலீஸார் மீட்டு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தப்பி ஓடிய மற்றொரு சிறுவனை நேற்று போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான 3 சிறுவர்களையும் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்ப போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.