சென்னை: தமிழகம் முழுவதும் போலீஸார் மேற்கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில் 1,577 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றச் செயல்களை முன் கூட்டியே தடுக்கும் வகையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிரப்படுத்தி உள்ளார். அந்த வகையில் மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் கடந்த 11-ம் தேதி வரை சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என மொத்தம் 52,279 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 1,577 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இதே காலகட்டத்தில் பிணையில் (ஜாமீன்) வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றும் வகையில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் என 3,288 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றவும், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்வதற்கும் போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வழக்கமான சோதனைகள், தீவிர கண்காணிப்பு மூலம் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.